வேலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.8.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 7 கோடியே 58 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தலா 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நல்வாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48" போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 7 கோடியே 58 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில், பொது வெளிநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் வெளிநோயாளிகள் பிரிவு, கண் வெளிநோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, இரத்த சேமிப்பு வங்கி, பிரசவ பிரிவு, பச்சிளங் குழந்தைகள் கவனிப்பு பிரிவு, ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையின் வாயிலாக தினமும் சுமார் 1,000 புறநோயாளிகள் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாடு மாநில ஆயுஷ் குழுமத்தின் 2016–17ஆம் ஆண்டிற்கான மாநில ஆண்டு செயல் திட்டத்தின் கீழ், தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 50 படுக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்க தேசிய ஆயுஷ் திட்ட இயக்ககத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான நிர்வாக ஒப்புதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
அதன்படி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 35,198 சதுர அடி பரப்பில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை, செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 29,460 சதுர அடி பரப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக் கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும்.
மேலும், வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் 7 தளங்களுடன் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை ஆகியவற்றில் பணிபுரிந்து பணிக் காலத்தில் உயிரிழந்த 43 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் திருமதி மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ஏ. சண்முககனி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு. டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.