150 விநாயகர் சிலைகள் காமராஜ் சாகர் அணையில் கரைப்பு


150 விநாயகர் சிலைகள் காமராஜ் சாகர் அணையில் கரைப்பு
x

ஊட்டியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 150 விநாயகர் சிலைகள் காமராஜ் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 150 விநாயகர் சிலைகள் காமராஜ் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.

விசர்ஜன ஊர்வலம்

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னனி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சார்பில் 170 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி, தரிசனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஊட்டியில் நடைபெற்றது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. முதலில் சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், 2-வது இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் வைக்கப்பட்ட 150 சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் சசி, விஷ்வ இந்து பரிஷத் கட்சி தலைவர் மணி ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

அணையில் கரைப்பு

மேளதாளம் முழங்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலம் நடந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு 150 விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படகு மூலம் அணையில் கரைக்கப்பட்டது.

வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகளும் கரைக்கப்பட்டன. ஊட்டியில் விசர்ஜன ஊர்வலம் நடந்ததால், முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது.


Next Story