150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தேவிபட்டினம் பகுதியில் படகு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பனைக்குளம்,
தேவிபட்டினம் பகுதியில் படகு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடல் பகுதியில் படகு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தேவிபட்டினம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் இளையராஜா மற்றும் ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி சுரேஷ், வனவர் ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
சந்தேகபடும்படியாக நிறுத்தப்பட்டிருந்த அந்த படகில் ஏறி சோதனை செய்தபோது பிளாஸ்டிக் வாளிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
கடல் அட்டைகள் பறிமுதல்
தொடர்ந்து படகில் இருந்த 150 கிலோ கடல் அட்டைகளையும் கடலோர போலீசார் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அந்த படகு யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படகில் வைக்கப்பட்டிருந்த இந்த கடல் அட்டையானது இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.