நடைபாதையை ஆக்கிரமித்த 150 கடைகள் அகற்றம்


நடைபாதையை ஆக்கிரமித்த 150 கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நடைபாதையை ஆக்கிரமித்த 150 கடைகள் அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நடைபாதையை ஆக்கிரமித்த 150 கடைகள் அகற்றப்பட்டன.

கடைகள் அகற்றம்

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் களை கட்டி உள்ளது. இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதி, காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் திடீரென உதயமானது.

இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உள்ளிட்ட கடைகளை பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் இணைந்து அதிரடியாக அகற்றினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆக்கிரமிப்பை அகற்றும் பணி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ், கிராம நிர்வாக அலுவலர் பரத் அருண், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆக்கிரமிப்பை அகற்றும் போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story