மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட 1500 லிட்டர் சாராயம் பறிமுதல்
கல்வராயன்மலையில் மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வரப்பட்ட 1500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சி அதனை சேலம் மாவட்டத்திற்கு வனப்பகுதி வழியாக கடத்தி செல்லப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு எழுத்தூர் கிராமத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வனப்பகுதியில் பதுங்கி இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு லாரி டியூப்களுடன் ஒன்றன் பின் ஒன்றாக 7 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் வந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்தனர். இருப்பினும் போலீசாரை பார்த்ததும் 8 பேரும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அவர்களில் 4 பேரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடி தலைதறைவாகினர். இதையடுத்து மோட்டார் சைக்களிள்களில் கொண்டு வரப்பட்ட 19 லாரி டியூப்களை போலீசார் பார்த்தபோது, அதில் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலா. மேல்முருவம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன். சீனிவாசன். கருநெல்லி கிராமத்தை சேர்ந்த தீர்ந்தமலை ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 1500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.