விநாயகர் சதுர்த்திவிழா பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
வேலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளது. மேலும் வீடுகளிலும் பொதுமக்கள் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.
பின்னர் சிலைகள் அனைத்தையும் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பார்கள். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியில் இருந்து சிலை ஊர்வலம் நடைபெறும் நாள் வரை அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
1,500 போலீசார் பாதுகாப்பு
சிலை வைக்கப்படும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் சிலை வைக்கப்படும் இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் நடைபெறும் தேதிகள் போன்ற விவரங்களையும் போலீசார் தயார் செய்து வைத்துள்ளனர். பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊர்வல பாதைகளிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.