15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15½ கோடி கடன் தள்ளுபடி


15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15½ கோடி கடன்  தள்ளுபடி
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15½ கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு கடன் சங்கங்கள் இணை பதிவாளர் மீனா அருள், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெறப்பட்ட மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் 68 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு வங்கி, 3 மலைவாழ்மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 10 கிளைகள் ஆகிய 82 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுதி பெற்ற 1,407 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் 15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 15 கோடியே 54 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணை பதிவாளர் (பொது வினியோகதிட்டம்) சுரேஷ், துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர் (விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி) சுகந்தலதா, பொது மேலாளர் (விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story