கம்பரசரில் வைத்திருந்த 157 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் பறிமுதல்
மாரண்டஅள்ளி அருகே கம்பரசரில் வைத்திருந்த 157 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாரண்டஅள்ளி
போலீசார் ரோந்து
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஈச்சம்பள்ளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் கம்பரசருடன் ஒருவர் நின்று இருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஈச்சம்பள்ளம் அருகே மாட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த கோபி (வயது 34) என்பதும், கம்பரசரில் 141 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 16 டெட்டனேட்டர் வைத்து இருப்பதும் தெரியவந்தது.
பறிமுதல்
அவர் பாறைகளை வெடி வைத்து தகர்க்க அவற்றை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் வெடிப்பொருட்கள் வைத்திருக்க எந்த ஒரு ஆவணமும் இல்லை. இதையடுத்து போலீசார் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோபியை போலீசார் கைது செய்தனர். கம்பரசரில் இருந்து வெளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.