நிலுவைத்தொகை ரூ.15¾ கோடி பட்டுவாடா
நிலுவைத்தொகை ரூ.15¾ கோடி பட்டுவாடா
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரைஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரைய நிலுவைத்தொகை ரூ.15கோடியே 76 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடக்கவிழா நடந்தது. 10-ந்தேதி முதல் கரும்பு அரவை நடந்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் பல நாட்கள் முழு அரவைத்திறனுக்கு கரும்புஅரவை செய்யப்படவில்லை. இந்த ஆண்டு அரவைப்பருவத்தில் குறியீட்டளவிற்கு கரும்பு அரவை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை6மணிவரை மொத்தம் 90ஆயிரத்து453டன்தான் கரும்புஅரவை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலைக்கு வழங்கப்படும் கரும்பிற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கரும்பு கிரையத்தொகை ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு அந்தந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும். கடந்த ஜூன் மாதம்1-ந்தேதி முதல் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்பிற்கான கிரையத்தொகை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் விவசாயிகள் அடுத்ததாக விவசாயப்பணிகளுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அவர்கள் கரும்பு கிரையத்தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆலை நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகை வழங்குவதற்கான நிதி ஆலையில் இல்லாததால், ஆலைக்கு வழிவகைக்கடன் வழங்கும்படி தமிழக அரசை, ஆலை நிர்வாகம் தொடர்ந்து கேட்டு வந்தது.இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆலைக்கு வழிவகைக்கடனாக ரூ.15கோடியே 76லட்சத்தைவழங்கியுள்ளது. இந்த தொகை நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது.
தொகை பட்டுவாடா
இதைத்தொடர்ந்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் எஸ்.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆலைக்கு இந்த அரவைப்பருவத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல்கரும்பு வழங்கியவிவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகைவழங்கப்பட வேண்டியிருந்ததால் தமிழக அரசிடம் வழிவகைக்கடன் வழங்கும்படி கேட்டிருந்தோம். அதன்படி தமிழக அரசுவழிவகைக்கடனாகரூ.15கோடியே 76 லட்சம்வழங்கியுள்ளது. இதன்மூலம்கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 57ஆயிரம் டன் கரும்பிற்கு வழங்க வேண்டியிருந்த கரும்பு கிரையத்தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த8-ந் தேதி முதல் கரும்பு வழங்கி வரும் விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம், ஆலையின் நிதியின் மூலம் கரும்பு கிரையத்தொகையை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
---------------