காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயறு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசிநாள் என்று வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயறு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசிநாள் என்று வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காப்பீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் வருவாய் கிராம மட்டத்திலும், உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் நெல் குறுவட்ட மட்டத்திலும் காப்பீடு செய்யப்படுகிறது. ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், கருங்குளம், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாரங்களுக்கு உட்பட்ட 30 குறுவட்டங்கள் உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன.
இதில் உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு காப்பீட்டு தொகையில் 1.5 சதவீதம் பிரிமீயம் அளவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏக்கருக்கு ரூ.209 கட்டணமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசிநாள் வருகிற 15-ந் தேதி ஆகும்.
பதிவு செய்ய வேண்டும்
எனவே உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்படும் இ-அடங்கல் அல்லது கையால் எழுதப்பட்ட அடங்கல் அசல் பிரதி மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிர் செய்யப்படும் கிராமத்தின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, பயிரின் பெயர், சாகுபடி பரப்பு மற்றும் வங்கி கணக்கு விவரங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க விவசாயிகள் தங்கள் ஆவணங்களில் உள்ள விவரங்களை முன்மொழிவு படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
பிழைகள்
விவசாயிகள் காப்பீடு பதிவு செய்தபின் அதற்கான ரசீதை பெற்றுக் கொண்டு தங்கள் காப்பீடு தொடர்பான விவரங்கள் அனைத்தும் சரியாக பதியப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
பிழைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் தவறான பதிவை நிராகரிக்க, தூத்துக்குடி மாவட்டத்துக்கான காப்பீடு நிறுவனமாகிய இப்கோ டோகியோ பொது காப்பீடு நிறுவனத்துக்கு, காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் முன் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
காலக்கெடுவுக்குள் பிழைகளை நிவர்த்தி செய்ய விவசாயிகள் மேலும் ஒரு சரியான பதிவை மேற்கொள்ள வேண்டும். இறுதி நேர நெரிசலை தவிர்க்க விவசாயிகள் முன்கூட்டியே காப்பீடு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.