மே மாதம் 15-ந்தேதி வரைகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும்;வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


மே மாதம் 15-ந்தேதி வரைகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும்;வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

கீழ்பவானி வாய்க்காலில் வருகிற மே மாதம் 15-ந்தேதி வரை தண்ணீர் விட வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் வருகிற மே மாதம் 15-ந்தேதி வரை தண்ணீர் விட வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-

மேட்டூர் வலது கரை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பொட்டாஷ் உர தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பு வாய்க்கால்களில் அரளை கல்களை கொண்டு கட்டமைப்பு ஏற்படுத்தும் பணியை வேளாண் துறை மேற்கொள்வது அரசு நிதியை வீணடிக்கும் செயல். இதனால் பாசனத்துக்கு எந்த நன்மையும் இல்லை. இதனால் கொப்பு வாய்க்கால்கள் சீரமைப்பை முழுமையாக விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

பவானிசாகர் அணை மற்றும் கீழ்பவானி வாய்க்கால் கட்டுமான பணியின்போது சத்தியமங்கலம், கோபி, பவானி வட்டங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்கள் நிபந்தனை பட்டாவாக வகைப்படுத்தப்பட்டது. இதனால் இந்த நிலங்களை விற்க, வங்கி கடன் வாங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த நிலங்கள் அயன் பட்டாவாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தானியங்கி கருவி

கொடிவேரி, காலிங்கராயன் பாசன பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க வருவாய் துறை அலுவலர்கள் குழு அமைக்க வேண்டும். பவானிசாகர் அணையில் தண்ணீர் நிறம் மாறி வெளியேறியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே பவானிசாகர் அணையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் தலா 2 இடங்களில் தண்ணீரில் உப்பின் (டிடிஎஸ்) அளவை கண்காணிக்க தானியங்கி கருவியை பொருத்தி தினமும் கண்காணிக்க வேண்டும்.

காலிங்கராயன் வாய்க்காலில் அட்டவணைப்படி வருகிற ஜூன் மாதம்16-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். வாய்க்காலின் இரு கரைகளையும் முழுமையாக சீரமைத்து, 786 மதகுகளுக்கும் பட்டர்பிளை வால்வுகளை பொருத்த வேண்டும். மேலும் பேபி வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் நடத்தப்படும் முகாம்களை அதிக கிராமங்களில் நடத்த வேண்டும். இதுபோல் ஆதார் கார்டு பெறுவதற்கான முகாம்களை பர்கூர் மலையில் 2 அல்லது 3 இடங்களில் நடத்த வேண்டும்.

கீழ்பவானி வாய்க்கால்

அந்தியூர் வனப்பகுதியில் வன உயிரின சரணலாயம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிடும் முன்னர், வனப்பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் பழங்குடி அல்லாத 119 பேருக்கு நிபந்தனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து இந்த பட்டாக்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

கோடை காலத்தை கருத்தில் கொண்டு, கீழ்பவானி வாய்க்காலில் வருகிற மே மாதம் 15 -ந்தேதி வரை தண்ணீர் விட வேண்டும். அப்போது தான் குடிநீர் பிரச்சினை இருக்காது. பவானி ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது வரம்பை நிர்ணயம் செய்யக்கூடாது. வேளாண் அலுவலர்கள் களப்பணிக்கு செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மரவள்ளி கிழங்குக்கான நுண்நூட்டம் மற்றும் வெள்ளைப்பூச்சி தாக்கும் மருந்துகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி மருந்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவனாபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்.

கடம்பூர் வனப்பகுதியில் இந்த ஆண்டில் 4 பேரை கொன்ற காட்டு யானையை பிடித்து வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடன் தள்ளுபடி

அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, 'பவானி ஆற்றில் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய தானியங்கி கருவி பொருத்தி, ஆன்லைனில் விவரங்களை பெறும் கட்டமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும். மேலும் கண்காணிப்பை காலிங்கராயன் வாய்க்காலிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு வருவதற்கு சில நாள்களுக்கு முன்னர் கடனை திருப்பிச்செலுத்திய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி அடுத்த கூட்டத்திற்குள் விவரம் தெரிவிக்கப்படும். பாசன வாய்க்கால், நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து காலதாமதம் செய்யாமல் அகற்ற வேண்டும்' என்றார்.


Next Story