ரெயில்களில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரெயில்களில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூரமங்கலம்:-
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு சென்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதை கடத்தி வந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நேற்று முன்தினம் சேலம் வழியாக சென்ற சாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லாத பெட்டி ஒன்றில் கேட்பாரற்ற நிலையில் பேக் ஒன்று கிடந்தது. அதனை சோதனையிட்ட போது 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவற்றை கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.