திருட்டுபோன லாரியின் உரிமையாளருக்குஇன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
திருட்டு போன லாரியின் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
லாரி திருட்டு
நாமக்கல்-சேலம் சாலையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகரன் (வயது55). கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு சொந்தமான லாரியை டிரைவர் சங்ககிரி அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இது குறித்து சந்திரசேகரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த சேலத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லாரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பின்னரும், பலமுறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசிபடி இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை தருமாறு சந்திரசேகரன் கேட்டு வந்துள்ளார். ஆனால் 19 மாதங்கள் கழித்து, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாரி டிரைவரின் நம்பிக்கை துரோகத்தால் காணாமல் போனதால், இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.16 லட்சம் இழப்பீடு
இதனால் லாரி உரிமையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.
அதில் லாரியின் உரிமையாளருக்கு பாலிசிபடி முழு இன்சூரன்ஸ் தொகை ரூ.15 லட்சத்தை லாரி காணாமல் போன 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வட்டியுடன் சேர்த்து 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் லாரி உரிமையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.