ரூ.16¼ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த பெயிண்டர் மனைவிக்கு ரூ.16¼ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு திருச்சி சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
விபத்தில் இறந்த பெயிண்டர் மனைவிக்கு ரூ.16¼ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு திருச்சி சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
விபத்தில் பெயிண்டர் பலி
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சாமிதுரை. பெயிண்டரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் சாமிதுரை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாமிதுரையின் மனைவி விமலா, தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ரூ.16 லட்சத்து 36 ஆயிரம் இழப்பீடு
வழக்கை விசாரித்த கோர்ட்டு, சாமிதுரையின் மனைவி விமலாவுக்கு ரூ.16 லட்சத்து 36 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை.
இதனால் அவர், மாவட்ட சிறப்பு கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.
அரசு பஸ் ஜப்தி
இதைத்தொடர்ந்து நேற்று காலை திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து தஞ்சை செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இதனால் மத்திய பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.