தயிர் சாதம் சமைக்காததால் 16 பேர் பணியில் இருந்து நீக்கம்: அம்மா உணவக ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு
கடலூரில் தயிர் சாதம் சமைக்காததால் அம்மா உணவக ஊழியர்கள் 16 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீசு விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சியில் உழவர் சந்தை அருகிலும், அரசு தலைமை ஆஸ்பத்திரியிலும் செயல்படும் அம்மா உணவகங்களில் 16 பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர், அவர்கள் 16 பேரையும் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர், மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று நோட்டீசு ஒன்று ஒட்டப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்டாயம் தயிர் சாதம்
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 15-ந் தேதி துப்புரவு ஆய்வாளர், ஆய்வு மேற்கொண்ட போது மதியம் விற்பனைக்காக சமைக்கப்பட்ட உணவு அதிகாலையிலேயே சமைக்கப்பட்டு, சூடான முறையில் இல்லாமலும், தரமற்றதாகவும் இருந்துள்ளது. இதில் விற்பனையாகும் தொகையினை முழு அளவில் கணக்கில் காட்டாமல், மாநகராட்சி கருவூலத்தில் குறைவாக செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளின்படி அம்மா உணவகங்களில் மதியம் உணவில் கட்டாயமாக தயிர்சாதம் சமைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தெரிவித்தும், தயிர்சாதம் சமைத்து விற்பனை செய்யாமல், மாநகராட்சிக்கு நிதிஇழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்துள்ளனர். மேலும் ஊழியர்கள் கையுறை, தலையில் தொப்பி அணியவில்லை. சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவில்லை. அதனால் இதற்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் 3 நாட்களுக்குள் எழுத்து மூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீதும் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. தயிர் சாதம் சமைக்காததாலும், அதனால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அம்மா உணவக ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.