மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 16 பேர் காயம்
ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 16 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு,
ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 16 பேர் காயம் அடைந்தனர்.
மாடு விடும் விழா
அணைக்கட்டு தாலுகா ஆண்டிக்கொட்டாய் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கரக திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் விழா இன்று நடந்தது.
அணைக்கட்டு துணை தாசில்தார் சுதா, மாநில செயற்குழு உறுப்பினரும் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவருமான சி.மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக 250 காளைகள் வந்தன. காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு ஓடுவதற்கு அனுமதி வழங்கினர்.
வாடிவாசலில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
காலை 10 மணி முதல் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன இதில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
16 பேர் காயம்
காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் திரண்டு இருந்ததால் திக்குமுக்காடி பல காளைகள் தடுப்பு கம்புகளை முட்டிமோதி பார்வையாளர்களை காயப்படுத்தின.
அதிவேகமாக ஓடிய காளைகள் எதிரில் நின்ற பார்வையாளர்களை மோதிவிட்டு இலக்கை அடைய ஓடியது. இதில் 16பேர் காயமடைந்தனர். அவர்களின் 4 பேர் அவசர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு, முகாமிட்டிருந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் அனுப்பி வைத்தனர்.
ஒரு காளை வேகமாக ஓடியபோது அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர் ஒருவரின் காலில் கயிறு சுற்றிக் கொண்டது.
இதனால் அந்த வாலிபர் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதை அறிந்த பார்வையாளர்கள் காளையின் வேகத்தை கட்டுப்படுத்தி காலில் சிக்கிக்கொண்ட கயிற்றை அப்புறப்படுத்தினர் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேகமாக ஓடி வெற்றி பெற்ற காளைகள் உள்பட மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.