காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம்
குனிச்சி மோட்டூரில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
காளை விடும் விழா
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி மோட்டூர் பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
காைளகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. கால்நடைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் இரண்டு காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் எஸ்.சங்கர், ஏ.வாசு, ஏ.முருகேசன், எம்.சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சி.ரவி, பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
16 பேர் காயம்
சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு காளை விடும் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் லேசான காயம் அடைந்தனர். குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர், எருது விடும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.