16 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்


16 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 16 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமர்நாத், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசியதாவது:-

வாக்குச்சாவடிகள் பிரிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1.1.2023-யை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி கடந்த மாதம் 4-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரையிலான காலங்களில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகள் முறைப்படுத்தும் பணிகள் நடந்து வந்தது.

மேலும் வாக்குச்சாவடியை பிரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, 1500 வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேவை அடிப்படையில் இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்யும் பணியும் நடந்தது.

கட்டிட மாற்றம்

இதன்படி திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 தொகுதிகளிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் விருத்தாசலத்தில் மட்டும் 2 இடங்களில் புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் 2,301 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 2303 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர 9 தொகுதிகளிலும் 16 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 39 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 14 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.


Next Story