அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிப்பு


அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிப்பு
x

தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

திருச்சி

தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இலங்கை தமிழர்கள் போராட்டம்

திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், பாஸ்போர்ட், விசா காலாவதியாகி தங்கி இருந்த வெளிநாட்டினர் என்று 150-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இலங்கை தமிழர்கள் அதிகமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் பாஸ்போர்ட், விசா இன்றியும், அவை காலாவதியான பின்பும் இந்தியாவில் தங்கி இருந்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள், தங்கள் மீதான வழக்குகளில் 90 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், வழக்குகளை விரைந்து முடித்து சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அகதிகள் முகாமில் வசித்து வழக்குகளில் சிக்கியவர்கள், தங்களை முகாமில் இருந்தே வழக்குகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

விடுவிக்க அனுமதி

சேலம், தருமபுரி, ராணிப்பேட்டை, மண்டபம், ஈரோடு, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்த போதும் குற்ற வழக்குகளில் சிக்கிய 16 பேர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இவர்களில் 16 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் அவர்கள், தங்கள் மீதான வழக்குகளை மறுவாழ்வு முகாம்களில் இருந்த படியே நடத்திக்கொள்ளவும் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று காலை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு வந்தார்.

கலெக்டர் அறிவுரை

அங்கு முகாமில் இருந்து விடுவிக்கப்பட இருந்த இலங்கை தமிழர்களிடம் கலெக்டர் கலந்துரையாடினார். அப்போது, இங்கிருந்து வெளியே சென்ற பின்பு, நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும், எந்த வித பிரச்சினையிலும், குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று அவர் அறிவுரை வழங்கினார். அத்துடன், சிறப்பு முகாமில் தங்கி உள்ள மற்றவர்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.கலெக்டருடன், மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி வருவாய்த்துறை அதிகாரிகள், கியூபிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

16 பேர் விடுவிப்பு

இதைத்தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த ரிஜிபன், பிரான்சிஸ் சேவியர், சுதர்சன், மகேந்திரன், நிரூபன், மதன்குமார், டேவிட்ராஜன், சிவசங்கர், நகுலேஷ், பிரேம்குமார், திலீபன், தேவராஜ், கிருபரசா, எப்சிபண், சவுந்தரராஜன், ரீகன் ஆகிய 16 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் உறவினர்கள் தங்கி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கும், வீடுகளுக்கும் புறப்பட்டு சென்றனர்.

மேலும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் 7 பேரை விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 40 பேர் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story