பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,165 பேர் எழுதினர்


பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,165 பேர் எழுதினர்
x

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,165 பேர் எழுதினர். 805 பேர் எழுதவரவில்லை.

வேலூர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 81 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 8,247 மாணவர்கள், 8,723 மாணவிகள் என மொத்தம் 16,970 பேர் எழுதுவதற்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

ஆனால் நேற்று நடந்த தமிழ் தேர்வினை 16,165 பேர் எழுதினர். 805 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு பணியில் 1,200 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

தேர்வில் காப்பியடிப்பவர்களை பிடிக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டறியவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 89 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

தேர்வினை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பலர் இரவு, பகலாக தங்களை தயார்படுத்தி வந்தனர். நேற்று அதிகாலை எழுந்தும் பலர் புத்தகங்களை புரட்டிப்பார்த்தனர். பள்ளியின் உள்ளே செல்லும் வரை சில மாணவர்கள் கைகளில் புத்தகங்களை ஏந்திக்கொண்டு படித்துச் சென்றனர். தேர்வு மையங்களுக்கு செல்லும் முன்பு பள்ளி அருகே உள்ள கோவில்களில் அவர்கள் வழிபட்டு சென்றனர். சில மாணவர்கள் கற்பூரம் ஏற்றி அதிக மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர்.

தேர்வு எழுதும் முன்பு மாணவர்களிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில் ஆசிரியர்கள் சில அறிவுரைகள் வழங்கினர்.

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த தேர்வினை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கல்வி அலுவலர் முனுசாமி உடன் இருந்தார்.


Next Story