சென்னையில் இருந்து புறப்பட்ட கோலாலம்பூர் விமானத்தில் திடீர் கோளாறு 167 பேர் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து கோலாம்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 167 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு 194 பயணிகளுடன் விமானம் வந்தது.
இந்த விமானம் மீண்டும் காலை 11.45 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் 159 பயணிகள் செல்ல இருந்தனர். இதற்காக அவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்துக்கு வந்து பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை உள்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
எந்திரக்கோளாறு
விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதே நிலையில் விமானம் பறப்பது ஆபத்து என்று கருதிய விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏற்றப்படவில்லை.
விமானம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. என்ஜினீயர்கள் குழு விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக்கோளாறை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆகியும் விமானம் புறப்படவில்லை.
பயணிகள் வாக்குவாதம்
இதனால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் சோர்வடைந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பயணிகளுக்கு அவசர, அவசரமாக உணவு வழங்கப்பட்டது.
விமானம் மாலை 4 மணிக்கு புறப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மாலை 5 மணி வரையிலும் விமானம் புறப்படவில்லை. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இதனால் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த பயணிகள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டு நாளை(அதாவது இன்று) புறப்பட்டு செல்லும் என அறிவித்தனர். பின்னர் 159 பயணிகளையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
167 பேர் உயிர் தப்பினர்
இதனால் சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல வேண்டிய 159 பயணிகளும் 7 மணி நேரத்துக்கும் மேல் சென்னை விமான நிலையத்தில் பரிதவித்தனர்.
அதே நேரத்தில் விமானி தகுந்த நேரத்தில் எந்திரக்கோளாறை கண்டுபிடித்துவிட்டதால் விமானத்தில் செல்ல இருந்த 159 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 167 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.