16-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு
பேரணாம்பட்டு அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
புடைப்பு சிற்பங்கள்
பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம், வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் 25 மாணவ- மாணவிகள் அங்கு சென்று கடந்த 2 நாட்களாக கள ஆராய்ச்சியில் ஈடுபட்டு கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர்.
இது குறித்து வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம், பேராசிரியர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-
16-ம் நூற்றாண்டை சேர்ந்தது
16-ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நாய்க்கர் காலத்தினுடைய குறுநில மன்னன் போருக்கு சென்ற புடைப்பு சிற்பங்களுடன் வெண் கொற்ற குடை பிடித்து ணைக்கும் குதிரையின் மேல்வாள் ஏந்தி போருக்கு செல்லும் குறுநில மன்னனை வெண் சாமரம் வீச அவனது மனைவிகள் வாழ்த்தி அனுப்புவது போல் இந்த புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில் பொதுவாக பட்டத்து இளவரசனும், படை தளபதிகளும் தான் போரை நடத்தி செல்வார்கள். ஆனால் இங்கு காணப்படும் சிற்பத்தில் மன்னனே போரை வழிநடத்தி ெசல்வதாக காணப்படுகின்றது.
குதிரையின் அருகில் நாயின் புடைப்பு சிற்பம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புடைப்பு சிற்பத்தில் 2 அரச குல பெண்களின் நினைவுக்கல்லில் ஒரு பெண் கிளியை தன் கையில் ஏந்தியவாறு உள்ளது. குறுநில மன்னன் இறந்த பிறகு அவருடைய மகனான பட்டத்து இளவரசன் போரை நடத்தி செல்கிறான். அவனது மனைவிகள் வெண்கொற்ற குடைகளுடன் வெண் சாமரம் வீசி வாழ்த்தி வழியனுப்பி வைப்பது போன்றும், இதன் அருகில் அக்னி குண்டம் ஒன்று காணப்படுவதாகவும், போரில் வீர மரணம் அடைந்த மன்னன், இளவரசன், படை வீரர்கள் ஆகியோரின் மனைவிகள் தங்கள் உயிரினை அக்னிகுண்டத்தில் மாய்த்து இறந்துள்ளதாக கிராம மக்கள் செவிவழி தகவலை கூறியதாக தெரிவித்தனர்.
வடநாட்டில் சத்ரியர் மரபில் வீரர்கள் போரில் மரணமடைந்தால் தீயில் இறங்கி மாய்த்து கொள்வது போன்று இங்கு அக்னி குண்டம் மண்ணில் மூடி புதைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இந்த புடைப்பு சிற்பங்களை கிராம மக்கள் தூய்மைப்படுத்தி மஞ்சள், குங்குமம்மிட்டு வழிப்பட்டனர்.