தூத்துக்குடிமாவட்டத்தில் வருகிற 16-ந் தேதிதாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்
தூத்துக்குடிமாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்குவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வருகிற 16-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஜமாபந்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) வருகிற 16-ந் தேதி முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடத்தப்படுகிறது. சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 19-ந் தேி வரை நடைபெறும் ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொள்கிறார். கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் வருகிற 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
தூத்துக்குடி
இதே போன்று தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையிலும், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமையிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையிலும், ஏரல் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16 முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ) தலைமையிலும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16 முதல் 26-ந் தேதி வரை கலால் உதவி ஆணையர் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16 முதல் 24-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் வருகிற 16 முதல் 26-ம் தேதி வரை சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16 முதல் 26-ந் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (இஸ்ரோ) தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் ஜமாபந்தி நடைபெறும். பொதுமக்கள் கோரிக்கை விண்ணப்பங்களை அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.