சூதாட்ட கும்பலை சேர்ந்த 17 பேர் கைது
குடியாத்தம் அருகே சூதாட்ட கும்பலை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும், இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் குடியாத்தம் அருகே உள்ள தமிழக-ஆந்திர மாநில எல்லையோரமுள்ள சைனகுண்டா கிராமம் அருகே ஒரு மாந்தோப்பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
சுற்றி வளைப்பு
இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன்நாதன், ராஜசேகரன், பாஸ்கர் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.
அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர். 17 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் இரண்டு பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.52 லட்சம் பறிமுதல்
அந்த பணத்தை குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் கொண்டு வந்து எண்ணப்பட்டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.
மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்கிற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனிவாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்த ரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும். குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறுவதாகவும், காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.