17 அதிநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
ஊட்டியில், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 17 அதிநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் 100 மீட்டர் தூர காட்சிகளை துல்லியமாக பதிவு செய்ய முடியும்.
ஊட்டி
ஊட்டியில், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 17 அதிநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் 100 மீட்டர் தூர காட்சிகளை துல்லியமாக பதிவு செய்ய முடியும்.
போக்குவரத்து நெரிசல்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களும் பொருட்கள் வாங்க நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையொட்டி போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசாரால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஊட்டியில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 17 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இது நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
மேலும் 64 கேமராக்கள்
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கூறியதாவது:-
ஊட்டியில் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதை சீரமைக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் 32 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 17 கேமராக்கள் இன்று(நேற்று) முதல் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. இதன் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம். நகரில் எங்கேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அதை அலுவலகத்தில் இருந்தவாறே சரி செய்ய முடியும். மேலும் வருகிற புத்தாண்டுக்குள் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் 64 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆகியோர் உடனிருந்தனர்.