ஆந்திராவில் இருந்து 1,700 கி.மீ. பயணம்: சபரிமலைக்கு சைக்கிளில் செல்லும் அய்யப்ப பக்தர்கள்

ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் 1,700 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்கின்றனர்.
சைக்கிளில் சபரிமலை
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். பாதயாத்திரையாகவும் தேனி வழியாக பலர் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அரிலோவா பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் தேனி வழியாக சபரிமலைக்கு நேற்று சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். 14 பக்தர்கள் ஆளுக்கு ஒரு சைக்கிளில் பயணம் செய்தனர். செல்லும் வழியில் சாலையோர மரத்தடி நிழலில் ஓய்வு எடுத்தபடி தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.இந்த குழுவுக்கு கங்காதர் என்பவர் குருசாமியாக இருந்து வழி நடத்திச் செல்கிறார். இந்த பயணம் குறித்து அந்த பக்தர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
1,700 கி.மீ. பயணம்
நாங்கள் கட்டுமான தொழிலாளர்கள். எங்களில் சிலர் 18 ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். எங்கள் குழுவினர் 10-வது ஆண்டாக சைக்கிளில் செல்கிறோம். வரும் வழிகளில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தபடி பயணம் மேற்கொள்கிறோம்.
இந்த ஆண்டு பயணத்தை கடந்த 10-ந்தேதி தொடங்கினோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,700 கி.மீ. பயணம் செய்து அய்யப்பனை தரிசனம் செய்வோம். இந்த ஆண்டும் அதே போன்று பயணத்தை மகிழ்வுடன் மேற்கொண்டுள்ளோம். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சபரிமலைக்கு சென்றடைய திட்டமிட்டுள்ளோம். இந்த பயணம் எங்களுக்கு மகிழ்வாகவும், மன நிறைவாகவும் உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.