ஜெராக்ஸ் கடைக்காரருக்கு ரூ.17,000 இழப்பீடு; நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
மின் கட்டணம் செலுத்தியும் அபராதம் வசூலிக்கப்பட்டதால் ஜெராக்ஸ் கடைக்காரருக்கு ரூ.17,000 இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான். இவர் பொட்டல்புதூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தனது ஜெராக்ஸ் கடைக்கு உரிய மின் கட்டணம் ரூ.317-ஐ தபால் நிலையம் மூலம் செலுத்தினார்.
ஆனால் 9-ந்தேதி ஆழ்வார்குறிச்சி மின்சார வாரியத்தில் இருந்து இளநிலை பொறியாளர் ஒருவர், ஜெராக்ஸ் கடைக்கு வந்து மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறினார். அப்போது சங்கிலி பூதத்தான், தபால் நிலையம் மூலம் கட்டிய மின்சார கட்டணத்துக்குரிய ரசீதை காண்பித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். பணம் கட்டினால் தான் கடைக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்று அப்போது தெரிவித்தனர்.
இதையடுத்து சங்கிலிபூத்தான் வேறு வழி இல்லாமல் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் கட்டணத்தை அபராதத்துடன் சேர்த்து ரூ.367 செலுத்தினார்.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கிலி பூதத்தான் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உறுப்பினர் கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் வழக்கை விசாரித்து ஆழ்வார்குறிச்சி மின்சார வாரிய இளநிலை பொறியாளர் ரூ.17 ஆயிரம் இழப்பீடு தொகையை சங்கிலி பூதத்தானுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.