'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்


பயோ மெட்ரிக் முறையில் பதிவு சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு சென்னையில் 1,727 முகாம்களில் தொடங்கியது.

சென்னை,

மகளிர் உரிமை தொகைக்கு தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கியது.

சென்னை மாநகராட்சியில் 3 கட்டங்களாக இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. மாநகராட்சி எல்லைக்குள் 1,428 ரேஷன் கடைகள் இருக்கின்றன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் கடந்த 23-ந் தேதி வரையில் 5 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

1,727 முகாம்கள்

முதல்கட்டமாக 703 ரேஷன் கடைகளில் உள்ள அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு 1,727 முகாம்களில் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பத்தை பதிவு செய்தனர்.

'டோக்கன்' அடிப்படையில் ஒரு முகாமில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் 30 பேரின் விண்ணப்ப படிவங்களும், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரையில் 30 பேரின் விண்ணப்ப படிவங்களும் பதிவு செய்யப்பட்டன. 500 அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இப்பணியில் சிறப்பு கவனத்துடன் ஈடுபட்டு உள்ளனர். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் 'பயோ மெட்ரிக்' முறையில் விண்ணப்ப விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பதற்காக ஒவ்வொரு முகாம்களிலும் உதவி தன்னார்வலர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் கொண்டு வரும் ஆதார் அடையாள அட்டை எண், ஸ்மார்ட் கார்டு எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை சரி பார்த்த பின்னர்தான் முறைபடி பெயர் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை அறிந்துக்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு உடனடியாக குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

'பயோ மெட்ரிக்'கில் கை ரேகை பதியவில்லை என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பி அதன் மூலமாகவும் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது. 'சர்வர்' பிரச்சினை ஏற்படும் சமயத்தில், கைப்பட ஆவணங்களை பதிவு செய்து பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

சில ரேஷன் கடைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ளனர். எனவே இந்த ரேஷன் கடைகளில் உள்ள அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியில் 4 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதே போன்று 1,500 அட்டைதாரர்கள் உள்ள ரேஷன் கடைகளின் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 3 தன்னார்வலர்களும், 1,000 அட்டைதாரர்கள் உள்ள கடைகளுக்கு 2 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

4-ந்தேதி வரை

சென்னையில் நேற்று தொடங்கிய முதல்கட்ட முகாம் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக 725 ரேஷன் கடைகளில் உள்ள அட்டைதாரர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை முகாம் நடக்கிறது. இந்த 2 முகாம்களிலும் விடுபட்ட நபர்களுக்கு 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிக்கான 2,266 'பயோ மெட்ரிக்' கருவி வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இப்பணிகளை கண்காணிக்க மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இப்பணிக்காக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story