1,759 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் 1,759 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் 1,759 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
ரூ.1000 உதவித்தொகை திட்டம்
உயர் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தினை நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டத்தின் தொடக்கவிழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "புதுமைப்பெண் திட்டத்தின்" கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 பெறுவதற்கான வங்கி அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளார் அதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தினை சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் படித்து வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி (காரைக்குடி) தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தி.பிரபாகரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் .குணசேகரன்,தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு அசோகன். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் .இளவழகன், காரைக்குடி தாசில்தார் .மாணிக்கவாசகம், மாவட்ட சமூக நல அலுவலர் .அன்பு குளோரியா,கனரா வங்கி மூத்த மேலாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.