179 அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பணிக்கான சான்றிதழ்


விருதுநகரில் சுதந்திர தின விழாவையொட்டி 179 அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பணிக்கான சான்றிதழை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகரில் சுதந்திர தின விழாவையொட்டி 179 அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பணிக்கான சான்றிதழை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் மேகநாதரெட்டி, திட்ட இயக்குனர் திலகவதி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் அரவிந்த் பாபு, முரளிதரன், திவ்யலட்சுமி, எத்தியா திருநாவுக்கரசு உள்பட 179 அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பணிக்கான சான்றிதழ்களை வழங்கினார். 3 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார்.

மாவட்ட நீதிபதி

முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் மேகநாத ரெட்டியை போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், அரசு அதிகாரிகள் வரவேற்றனர். விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிவகாசி லலித் கலா நாட்டியாலா மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்திமான்ராஜ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தேசிய கொடி ஏற்றினார். விருதுநகர் நகர சபை அலுவலகத்தில் நகர சபை தலைவர் மாதவன் தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் தட்சிணாமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நீதிபதிகள் சிந்துமதி, கவிதா, ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத்தூணில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


Next Story