தயார் செய்யப்பட்ட 18 அடி உயர அரிவாள்கள்


தயார் செய்யப்பட்ட 18 அடி உயர அரிவாள்கள்
x

சிங்கம்புணரியில் நேர்த்திக்கடனுக்காக பதினெட்டாம்படி கருப்பண சாமிக்கு 18 அடியில் இரண்டு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் நேர்த்திக்கடனுக்காக பதினெட்டாம்படி கருப்பண சாமிக்கு 18 அடியில் இரண்டு அரிவாள்கள் தயார் செய்யப்பட்டது.

18 அடி உயர அரிவாள்கள்

சிங்கம்புணரியில் அரிவாள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக அரிவாள்கள் செய்ய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு அரிவாள்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜெயங்கொண்டநிலை பகுதியை சேர்ந்த கண்ணன் தேன்மொழி குடும்பத்தார் சார்பில் நேர்த்திக்கடனுக்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 18 அடியில் சுமார் 110 கிலோ எடை கொண்ட இரண்டு அரிவாள்கள் செய்ய இங்குள்ள ஒரு அரிவாள் பட்டறையில் ஆர்டர் வழங்கப்பட்டது.

இதையடுத்து அந்த பட்டறை உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஏழு நாட்கள் விரதம் இருந்து 18 அடி உயர அரிவாள்கள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நேர்த்திக்கடன்

7 நாட்கள் நடைபெற்ற அரிவாள்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து அந்த அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த அரிவாள்களை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். முன்னதாக 110 கிலோ எடை கொண்ட தலா இரண்டு 18 அடி அரிவாள்கள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து பட்டறையை சேர்ந்த விக்கி என்பவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோவில்களுக்கு அரிவாள்கள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு கோவிலுக்கு பலமுறை இங்கிருந்து அரிவாள் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. கோவிலுக்கு அரிவாள் செய்யும் நாட்களில் விரதம் இருந்து தயார் செய்கிறோம். தயார் செய்யப்பட்ட அரிவாள்களை நேர்த்திகடன் செலுத்துபவர்கள் கோவிலுக்கு வழங்கிய பின்னரே நாங்கள் விரதத்தை கைவிடுவோம் என்றார்.



Next Story