பருத்தி வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி; பெண் உள்பட 8 பேர் கைது
சங்கரன்கோவிலில் பருத்தி வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் பருத்தி வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பருத்தி வியாபாரி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 60). இவர் சங்கரன்கோவிலில் பருத்தி, வத்தல் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் வேலை பார்த்து வருபவர் சங்கரன்கோவில் திரு.வி.க. தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வம் (28). மதுரையில் உள்ள மொத்த கடைகளுக்கு பருத்தி மற்றும் வத்தல் ஏற்றுமதி செய்ததற்கான பணத்தை செல்வம் வசூல் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மதுரையில் வசூல் செய்த ரூ.18 லட்சத்து 40 ஆயிரத்தை செல்வமும், அவரது நண்பர் சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியை சேர்ந்த சரவணன் மகன் ஜோதி ரமேஷ் (28) என்பவரும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
மிரட்டல்
மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்யாமல் இருக்க முத்தையாவை ஒரு கும்பல் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன முத்தையா, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து துணை சூப்பிரண்டு சுதீர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சங்கரன்கோவில் ஓடை தெருவை சேர்ந்த செல்வத்தின் தாயார் சித்ரா (45), காயிதே மில்லத் 2-வது தெருவைச் சேர்ந்த திவான் அலி மகன் செய்யது அலி (38), திரு.வி.க. புதுத்தெருவை சேர்ந்த வன்னியராஜ் (45), மதுரை பி.டி.காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி (51), அவரது மகன் தன்ராஜ் (31), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் சபாபதி (35) ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
8 பேர் கைது
இதையடுத்து தனிப்படை போலீசார் கழுகுமலை பகுதியில் வைத்து செல்வம், ஜோதி ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.15 லட்சம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.