குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கேரளாவிற்கு நகை வாங்க சென்றவரிடம் ரூ.18½ லட்சம் திருட்டு -பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கேரளாவிற்கு நகை வாங்க சென்றவரிடம் ரூ.18½ லட்சம் திருடப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கேரளாவிற்கு நகை வாங்க சென்றவரிடம் ரூ.18½ லட்சம் திருடப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
ரூ.18½ லட்சம் திருட்டு
மதுரை தெற்காவணி மூலவீதி, தொட்டியன் கிணற்று சந்து பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் லட்சுமிபுரத்தை சேர்ந்த தமிழரசன் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரளாவில் பழைய நகை வாங்குவதற்காக கிருஷ்ணமூர்த்தி, தமிழரசனிடம் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
அவர் ரெயிலில் கேரளா செல்வதற்காக பணத்துடன் பாண்டிபஜார் வழியாக ரெயில்வே நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவருக்கு தெரிந்த கண்ணபிரான் என்பவர் ஒரு பெண்ணுடன் அங்கு வந்தார். மேலும் அவர் தான் மது கலந்து வைத்திருந்த குளிர்பானத்தை தமிழரசனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் பேசி கொண்டே இருந்தபோது தமிழரசனுக்கு போதை தலைக்கு ஏறியதாகவும், அந்த நேரத்தில் பெண் தமிழரசனை மயக்கி அவர் வைத்திருந்த 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது. .
பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
பின்னர் அந்த பெண்ணும், கண்ணபிரானும் அங்கிருந்து தப்பி மாட்டுத்தாவணி வந்தனர். அங்கு அந்த பெண்ணை விழுப்புரம் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டார். இதற்கிடையில் போதை தெளிந்து கண் விழித்த தமிழரசன் தான் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடை உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கண்ணபிரான் மற்றும் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது அந்த பெண் விழுப்புரத்தில் இருக்கும் இடத்தை அறிந்து போலீசார் அங்கு சென்று அவரை தேடி வருகின்றனர்.