91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பாண்டூர் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.
பாண்டூர் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.18½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராம ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ராஜகுமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.18.55 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசுகையில்,மக்கள் தொடர்பு முகாம் என்பது தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை தாலுகா பாண்டூர் கிராமங்களை சுற்றியுள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கடந்த ஒரு மாத காலமாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன. பல்வேறு துறைகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன.முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 96 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள 34 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமில் 91 பேருக்கு ரூ.18.55 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, உதவி ஆணையர் (கலால்) அர.நரேந்திரன், தனித்துணை கலெக்டர் (வருவாய் நீதிமன்றம்) வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.