காசநோயை கண்டறிய 18 நடமாடும் 'எக்ஸ்ரே' வாகனங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


காசநோயை கண்டறிய 18 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

காசநோயை கண்டறிய 18 நடமாடும் ‘எக்ஸ்ரே’ வாகனங்களை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவுடன் காணொலி காட்சி மூலமாக காசநோய், கண் புரை சிகிச்சை, கொரோனா தடுப்பூசி செலுத்துவது உள்பட பல்வேறு கருத்துகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், குறிப்பாக தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடியாகும். இதில் முதல் தவணையில் 94.31 சதவீதமும், 2-ம் தவணையில் 84.82 சதவீதமும் என 11.33 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதுவரை 30 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 4.44 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் (12-ந் தேதி) நடந்த 30-வது தடுப்பூசி முகாமில் மட்டும் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

18 எக்ஸ்ரே வாகனங்கள்

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி முதல் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதில் முதல் தவணையில் 75 லட்சத்து 38 ஆயிரத்து 578 பேருக்கும், 2-ம் தவணையாக 1 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரத்து 62 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, இதில் முதல் தவணையில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 307 பேருக்கும், 2-ம் தவணையில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 114 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் காசநோயை கண்டறிவதற்காக 18 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். காச நோயாளிகளுக்கான கூடுதல் ஊட்டச்சத்துக்கான சமூக ஆதரவு தொடங்கப்பட்டு, அதை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் கண் புரையில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற தேவையான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண் புரை சிகிச்சை

அதன் அடிப்படையில் தேவையான அனைத்து நபர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அரசு கோவிட் தடுப்பூசி மற்றும் இதர சுகாதார சேவைகளுக்கு தமிழக அரசுக்கு தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ப.செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story