போலீஸ் ஏட்டை தாக்கிய சகோதரர்களுக்கு 18 மாதம் சிறை
போலீஸ் ஏட்டை தாக்கிய சகோதரர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. அங்கு வில்லுப்பாட்டு படிக்கும்போது அப்பகுதியைச் சேர்ந்த வேம்பு மகன்கள் சேர்மக்கனி, மகாராஜன் மற்றும் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஏட்டு கஜேந்திரன் மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். அப்போது, அவர்கள் 2 பேரும், போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தும், பணி செய்ய விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் ஏட்டு கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அம்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி செந்தில்குமார் விசாரித்து போலீஸ் ஏட்டுவை பணிசெய்ய விடாமல் தடுத்தும், தாக்குதலிலும் ஈடுபட்ட சகோதரர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமலைகுமார் ஆஜரானார்.