18,489 மரக்கன்றுகள் நடும் விழா
வெள்ளகோவிலில்இலவச மருத்துவமுகாம், 18,489 மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
மரக்கன்று நடும் விழா
வெள்ளகோவில் சொரியங்கிணத்துபாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் ரூ.50 லட்சத்து 81 ஆயிரத்தில் பூங்காக்கள் மற்றும் சாலையோரங்களில் 18,489 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு சென்று மருத்துவர், செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் நோய் தடுப்பு பராமரிப்பு செவிலியர் மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 26,272 கர்ப்பிணிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் 13,55,000 பேருக்கு பரிசோதனை செய்து 1 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 59 முகாம்கள் நடத்தப்பட்டு 33 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். 98 சதவீத பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 77 சதவீதம் பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.