சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 1875 பேர் கலந்து கொள்ளவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 1875 பேர் கலந்து கொள்ளவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 1875 பேர் கலந்து கொள்ளவில்லை.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம்
தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்ப சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.. இதன்படி நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வும் தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 4 ஆயிரத்து 359 ஆண்கள், 979 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 338 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. நேற்று காலை 8.30 மணி முதலே தேர்வு மையங்களில் நீண்டவரிசையில் நிற்க வைத்து பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலையில் நடந்த எழுத்து தேர்வில் 3 ஆயிரத்து 659 ஆண்களும், 829 பெண்களும் என 4,488 பேர் மட்டுமே எழுதினர்.
தமிழ் தகுதி ேதர்வு
மதியம் நடந்த தமிழ் தகுதி தேர்வில் 5 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்ததில் 4 ஆயிரத்து 917 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மொத்தம் 2 தேர்வினையும் 1,875 பேர் எழுதவில்லை. ஐ.ஜி.முருகன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுத வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டாலும் ஸ்மார்ட் வாட்ச், ப்ளுடூத், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதியில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சாதாரண கைக்கடிகாரமும் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேரம் குறித்து அறிய முடியாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வினாக்களுக்கு பதிலளிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்தனர்.
அவதி
மேலும், குடிநீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவதி அடைந்தனர். இதுதவிர, முதல் எழுத்து தேர்வு 12.30 மணிக்கு முடிந்து அடுத்த தமிழ் தகுதி தேர்வு 3.30 மணிக்குத்தான் நடைபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சாப்பிட வெளியில் செல்ல அனுமதிக்காமல் உள்ளேயே சாப்பாடு விற்பனை செய்துள்ளனர். பணம் உள்ள கைப்பை முதலியவற்றை வெளியில் பறித்து வைத்துக் கொண்டதால் உள்ளே கொடுத்த சாப்பாட்டினை வாங்கி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.
3 மணி நேரம் தேர்வு அறைக்குள் அடைத்து வைத்ததால் தேர்வர்கள் அடுத்த தேர்விற்கு படிக்க முடியாமல் அவதி அடைந்தனர். சில தேர்வு மையங்களில் வெளியில் விட்ட நிலையில் ராமநாதபுரம் நகரில் பெண் தேர்வர்களை மட்டும் இவ்வாறு நடத்தியது வேதனை அடையச் செய்துள்ளது.