18-ம் படி கருப்பணசாமி நிலைக்கதவுக்கு மலர் அலங்காரம்
அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 18-ம் படி கருப்பணசாமி நிலைக்கதவுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பிரமாண்ட அரிவாளையும் பக்தர்கள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகர்கோவில்,
அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி 18-ம் படி கருப்பணசாமி நிலைக்கதவுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பிரமாண்ட அரிவாளையும் பக்தர்கள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடிப்பெருக்கு விழா
பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. பின்னர் ஆடி மாத பவுர்ணமியையொட்டி கடந்த 1-ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அன்றிரவு காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் இரவு திருநிலைக் கதவுகள் திறக்கப்பட்டு, வாசனை மிகு சந்தனமும் சாத்தப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.
நேற்று உற்சவ சாந்தியும், ஆடி 18-ம் பெருக்கு விழாவும் நடந்தது. இதையொட்டி கருப்பணசாமிக்கு பூமாலைகளும், சந்தனமும், எலுமிச்சம்பழங்களையும் மற்றும் அரிவாள்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி நெய் விளக்கேற்றியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நெல், தானியம், காசு, பணத்தையும் செலுத்தினார்கள்.
நூபுர கங்கையில் நீராடினர்
மூலவர் சுவாமி, உற்சவர் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. உற்சவ சாந்தியுடன் ஆடி திருவிழா நிறைவு பெற்றது. மேலும் அழகர்மலையில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் வேல்சன்னதியிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
இதேபோல் அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.சுற்றுவட்டார கிராம மக்கள், வெளி மாவட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.