2 நாட்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை
தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. குடிமகன்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மது அருந்தி கொண்டாடுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மூலமும் தினமும் சராசரியாக ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.19 கோடிக்கு மதுவிற்பனை
பண்டிகை காலங்களில் மட்டும் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் இதன் விற்பனை 2 மடங்கு வரை அதிகரித்து காணப்படும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், மற்றும் தீபாவளி பண்டிகை அன்று என 2 நாட்களில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.19 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூ.9 கோடிக்கும், அதற்கு முதல் நாள் ரூ.10 கோடிக்கும், 22-ந்தேதி ரூ.6 கோடியே 14 லட்சத்துக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் 2 நாட்களில் ரூ.1½ கோடிக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.