ரெயிலில் கடத்தி வரப்பட்ட 19½ கிலோ கஞ்சா சிக்கியது
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 19½ கிலோ கஞ்சா
டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் முதலாவது நடைமேடை பகுதிக்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அப்போது ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு பெட்டியில் சந்தேகப்படும்படியாக 2 டிராவல் பேக் கிடந்தது. அந்த பேக்கிற்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை.
இதைத்தொடர்ந்து பேக்கை கைப்பற்றி போலீசார் திறந்து பார்த்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான 19½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. பின்னர் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அதை யார் கடத்தி வந்தார்கள்? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.