தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு


தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
x

அம்முண்டியில் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வேலூர்

திருவலம்

திருவலம் அருகே உள்ள அம்முண்டி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 41). இவர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இவர் பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி வளர்மதியும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நெக்லஸ், தாலி சரடு, வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட 19 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். சுதாகர் அளித்த புகாரின்பேரில் திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தடயவிய நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவைக்கப்பட்டது.

இது குறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story