19 கடைகளில் திருட்டு; வாலிபர் கைது
ஊட்டி மார்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி மார்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடைகளில் திருட்டு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், மீன், மளிகை, துணி கடை மற்றும் மருந்து கடைகள் என 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு 2 காவலாளிகள் உள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.
இதனால் எப்போதுமே மக்கள் கூட்டம் காணப்படும். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் வியாபாரிகள் தங்களது கடையை திறக்க வந்தனர். அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், உள்ளே பார்த்த போது பணம் திருட்டு போனது தெரியவந்தது.
வாலிபர் கைது
தகவல் அறிந்த ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் போலீசார் மார்க்கெட்டுக்கு சென்று விசாரனை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட்டில் ஒருவர் பாபு என்பவரது கடையை உடைத்து உள்ளே வைத்திருந்த பணத்தை எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மொத்தம் 19 கடைகளில் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ரூ.31 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஊட்டியில் ஒரே நேரத்தில் 19 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஊட்டி பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனோஜ் ஏற்கனவே கஞ்சா மற்றும் அடிதடி வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.