திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு 'சீல்'
திண்டுக்கல் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், பூமார்க்கெட், மீன்மார்க்கெட், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் இருக்கின்றன. இந்த கடைகள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் ஏலமிடப்பட்டு குத்தகைக்கு விடப்படுகின்றன. ஓட்டல், டீக்கடை, மளிகை, இனிப்பு கடை என பல்வேறு வகையான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகளுக்கு வாடகை வசூலிப்பதில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து இயல்பு நிலை திரும்பியதும் பல கடைக்காரர்கள் வாடகை செலுத்தினர். ஆனால் 203 கடைகளுக்கு வாடகை செலுத்தப்படாமல் இருந்தது. எனவே அந்த கடைகளின் குத்தகை உரிமத்தை ரத்து செய்வதற்கு மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதை அறிந்த பல கடைக்காரர்கள் வாடகையை செலுத்தினர். ஆனால் 72 கடைகளுக்கு ரூ.1 கோடி வரை வாடகை பாக்கி இருந்தது. இதனால் வாடகை செலுத்தாத கடைகளை 'சீல்' வைக்கும்படி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உதவி வருவாய் அலுவலர் வில்லியம் சகாயராஜ், சிறப்பு வருவாய் அலுவலர் லோகநாதன், ஆரோக்கியசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று கடைகளை 'சீல்' வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஒரே நாளில் 19 கடைகளை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மட்டும் 10 கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சில கடைக்காரர்கள் கடைக்குள் இருந்த பொருட்களை எடுத்து சென்றனர். இதேபோல் மீதமுள்ள கடைகளையும் 'சீல்' வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.