மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 193 பேர் மனு


மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 193 பேர் மனு
x

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 193 பேர் மனு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 193 போ் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ஸ்ரீதர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி ஜெயந்தி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்களான தோவாளை பகுதியை சேர்ந்த ஜீவிலின் சஜிதா, திருவட்டார் பகுதியை சேர்ந்த நிஷா, உஷா அருள்மலர் மற்றும் தக்கலை பகுதியை சேர்ந்த மோனிகா, முன்சிறை பகுதியை சேர்ந்த ஆன்சி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை கலெக்டா் ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.


Next Story