திருச்சி மாவட்டத்தில் 195 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் 195 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சாலை தடுக்க 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி திருச்சி மாநகரில் 45 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 150 இடங்களிலும் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் முகாம் நடந்தது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் 15 நடமாடும் மருத்துவக்குழுவினர் நேரில் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். 30 சிறப்பு மருத்துவக்குழுவினர் அங்கன்வாடி பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடந்தது. சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்குஅடைப்பு, தொண்டைப்புண், கண்களில் நீர்வடிதல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான உடல்வலி தான் இதன் முக்கியமான அறிகுறியாகும். இந்த அறிகுறியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டதுடன் தொடர் சிகிச்சை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.