தூத்துக்குடி மாவட்டத்தில் 19,997 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


தூத்துக்குடி மாவட்டத்தில் 19,997 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 19,997 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 19 ஆயிரத்து 997 மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ்-1 தேர்வு இன்று(ெசவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

பிளஸ்-2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 204 பள்ளிகளில் பயிலும் 9,137 மாணவர்கள், 10,860 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 997 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதில் 182 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 44 வினாத்தாள் கட்டுக் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அவைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பறக்கும் படை

வினாத்தாள் கட்டுகளை 23 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 91 பேர் துறை அலுவலர்களாகவும், 91 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1,200 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முதல் நாளான நேற்று மொழிப்பாடம் தேர்வு நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர்.

பிளஸ்-1 தேர்வு

இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 தேர்வு தொடங்குகிறது இந்த தேர்வை 204 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 418 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

மேலும் 107 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 310 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 22 ஆயிரத்து 921 மாணவ, மாணிகள் எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


Next Story