19-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
கன்னிவாடியில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கன்னிவாடி பகுதியில் பழமையான கல்வெட்டு ஒன்று இருப்பதாக மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த மையத்தில் ஆய்வாளர்களான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த லட்சுமணமூர்த்தி, அரிஸ்டாட்டில் ஆகியோர் நேற்று கன்னிவாடிக்கு வந்தனர். பின்னர் கல்வெட்டு குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.
அப்போது கன்னிவாடி போலீஸ் நிலையம் எதிரே உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் அந்த கல்வெட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற ஆய்வாளர்கள், கல்வெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், அந்த கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது. கன்னிவாடியில் பெரிய காளிகோவில் காவலுக்கு குமார நரசிம்ம அப்பயன் என்பவரை நியமித்துள்ளதாக அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் அதற்கான செலவினங்களை கொப்பம்மா என்பவர் உபயமாக வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை வைத்து பார்க்கும் போது அது 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என்பது தெளிவாகிறது என்றனர்.