தென்னை வளர்ச்சி வாரிய பண்ணை மேலாளர் முதல் மாணவராக தேர்வு
உடுமலை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் (கோவை), தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்களை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வை, பல்வேறு இடங்களில் பணியில் உள்ளவர்கள் உள்ளிட்டோர் எழுதினர். இதைத்தொடர்ந்து, சான்றிதழ் பாடம் மற்றும் முதுகலை பட்டய கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, ஆழியாறு நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி தலைமை தாங்கி, திறந்த வெளி மற்றும் தொலை தூரக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்-முதுகலை பட்டயப்படிப்பு தேர்வில் 96.33 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற கு.ரகோத்துமனுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. இதை துணை வேந்தர் வி.கீதாலட்சுமி வழங்கினார். இந்த விழாவில் தமிழ் நாடு பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளரான, இணைப்பு பேராசிரியர் (தென்னை) கே.ராஜமாணிக்கம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக, இயக்குனர் பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுகலை பட்டயத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ள கு.ரகோத்துமன், உடுமலையை அடுத்து தளியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.