அரசு பள்ளியை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்; கலெக்டரிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை
தாளவாடி அருகே அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிதர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி அருகே அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிதர வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு பள்ளி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோட்டாடை, ஒசட்டி, குளியாடா, புதுக்காடு, சோக்கிதொட்டி, உப்பட்டி, அட்டப்பாடி, சீகட்டி ஆகிய மலைக்கிராம மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில், 60 சதவீதம் பேர் பழங்குடியின மாணவ- மாணவிகள். அங்கு 8-ம் வகுப்பு முடித்துவிட்டு 9-ம் வகுப்பு சேர வேண்டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது. பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் கல்வியை இடையிலேயே நிறுத்தி விடும் நிலை ஏற்படுகிறது. கோட்டாடை நடுநிலை பள்ளிக்கூடத்தை உயர்நிலை பள்ளிக்கூடமாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு ஊர்மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிக்கூடம் தரம் உயர்த்தப்படவில்லை.
இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த பள்ளிக்கூடம் அமைய கோட்டாடை கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து தர செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மகளை மீட்க கோரிக்கை
ஈரோடு இந்திராநகர் கற்பகம் லே-அவுட் பகுதியை சேர்ந்த முகமது மன்சூர் அலியின் மனைவி ஆதிலா (வயது 50) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
எனக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உம்மு ஹபீபா சுமையாவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொடுத்தோம். திருமணமான 3 மாதத்தில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஈரோட்டுக்கு வந்த எனது மகள் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஈரோட்டுக்கு வந்த மூத்த மகளின் கணவர் எங்களை தாக்கிவிட்டு, உம்மு ஹபீபா சுமையாவை வலுக்கட்டாயமாக இழுத்து அழைத்து சென்றுவிட்டார். அதன்பிறகு எனது மகளை பார்க்க அவர் அனுமதிக்கவில்லை. என் மகள் உயிரோடு தான் இருக்கிறாரா? என்று கூட தெரியவில்லை. எனவே எனது மகளை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
விவேகானந்தருக்கு சிலை
இந்து சமய திருக்கோவில்கள் நலச்சபை மாவட்ட தலைவர் தினேஷ்குமார் கொடுத்த மனுவில், "தேசியம், தெய்வீகத்தை பாதுகாத்த விவேகானந்தருக்கும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான சுதந்திர போராட்டத்துக்கு படை திரட்டிய முத்துராமலிங்க தேவருக்கும் ஈரோடு சோலாரில் சிலை அமைக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.
முகாசிபிடாரியூர் கொத்தம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசின் சார்பில் நத்தம் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அரசு வேலை செய்யும் அவர் வீடு கட்டியுள்ள இடத்துக்கு பட்டா பெறாமல் அருகில் உள்ள காலி இடத்துக்கு பட்டா பெற்று இருக்கிறார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவருக்கு அரசு வழங்கிய நத்தம் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 162 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.